கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் கொலையாளிகள் கொலை செய்துவிட்டு தப்பி செல்வதற்கு கார் கொடுத்து உதவி புரிந்த காரின் உரிமையாளரான இம்ரான் மற்றும் ஓட்டுநர் அய்யூப் ஆகிய 2 பேரையும் தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து லாலா ஏரி பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இதுவரை 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.