நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும் இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு என பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை பொதுமக்களுக்கு முறையாக இவர்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாமிநாதன், கணேஷ் ஆகியோர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளரான ஶ்ரீகாந்த் கணக்காளரான மீரா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள சாமிநாதன், கணேஷ் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சகோதரர்கள் இருவரும் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.