ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவுக்குச் சொந்தமான பிடரி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர், அந்த ஆசிரமத்தின் கிளையான குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நான்கு பெண் குழந்தைகளும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனையறியாத, ஜனார்த்தன் சர்மா கடந்த நவம்பர் இரண்டாம் தேதி, பிடரி ஆசிரமத்தில் தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, நால்வரும் அகமதாபாத்திற்கு இடமாற்றப்பட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அகமதாபாத் ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் சர்மாவை உள்ளே அனுமதிக்காமல், ஆசிரம ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினரின் உதவியோடு ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் நீண்ட மோதலுக்குப் பின், தன்னுடைய இரண்டு இளைய மகள்களை மீட்டார். ஆனால், மூத்த மகள்களான லோபமுத்ரா(21), நந்திதா (18) ஆகிய இருவரும் அவருடன் செல்ல சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனார்த்தன் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள இரு மகள்களையும் மீட்டுத் தருமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனடிப்படையில், நித்யானந்தா உட்பட ஆறு பேர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அகமதாபாத் ஆசிரமத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
சோதனைக்குப்பின், இரண்டு பெண் ஆசிரம ஊழியர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது குறித்து பேசிய மூத்த காவல் அலுவலர், ‘ ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனார்த்தன் சர்மாவின் இரண்டு பெண் குழந்தைகளிடம் (வயது 9, 10) நாங்கள் கேட்டபோது, அவர்களை ஆசிரமத்தில் அடித்து சித்ரவதை செய்ததாகவும், தங்களை அடிமைப் போல் நடத்தியதாகவும் கூறியதன் அடிப்படையில் இரு ஆசிரம ஊழியர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் அக்குழந்தைகளை ஆசிரமம் நடத்துவதற்காக பக்தர்களிடம் நிதி வசூலிக்குமாறும் அவர்கள் மிரட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பின்பே நிறைய உண்மைகள் வெளிவரும்’ என்று கூறினார்.
இதற்கிடையே, நேற்று ஜனார்த்தன் சர்மாவின் இரண்டாவது மகளான நந்திதா (மா நித்யானந்தா) தான் கடத்தப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் முன்னதாக ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.