நியாயவிலை கடைகளில் அரிசி மூட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிவசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இம்மாவட்டம் முழுவதுமாக நியாய விலை கடையின் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை காவல் துறையினர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அவர்கள் நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து இரவு நேரத்தில் 8 மணி அளவில் வாணியம்பாடி காதர்பேட்டை அடுத்து இருக்கும் நியூடெல்லி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக நியாய விலை கடையின் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைவாக சென்று லாரியை சுற்றி வளைத்துள்ளனர்.
அதன் பின் அன்னு என்பவருடைய கும்பல் நியாய விலை கடையில் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு இருந்துள்ளனர். பின்னர் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 5 டன் அரிசியையும் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.