Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாற்றுச்சான்றிதழ் வேண்டாம்… மாணவர்கள் திடீர் போராட்டம்… முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை…!!

ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது நேற்று சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தால் மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீடு கிடைக்காமல் பெற்றோர்களில் பொருளாதார நிலை பாதிப்படைகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நடுநிலை பள்ளியில் இடவசதி உள்ளதால் இந்த கல்வியாண்டியில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், அதுவரை மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் காத்திருப்போம் என்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து கூடிய விரைவில் இங்கு மேல்நிலை பள்ளி அமைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை மாணவர்கள் சக்கரக்கோட்டையில் உள்ள அரசு  உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இங்கு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதும் மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்து கொள்ளலாம் என உறுதியளித்துள்ளார். இதற்க்கு பின்னரே பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |