பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை நடைபெறும் பொழுது ஆனந்த் சிங் அங்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவர்மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. UA என்றழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் நிச்சயம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனந்த் சிங்கை கைது செய்யவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எம்எல்ஏ ஆனந்த்சிங் தான் தலைமறைவாக -வில்லை என்றும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது நண்பரைக் காண வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வீட்டை கடந்த 14 ஆண்டுகளாக தாம் பயன்படுத்தவில்லை என்றும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.