குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ராஷ்டிரபதி பவன் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளருக்கு தொற்று என தகவல் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு இருந்தது, தற்போது அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என தெரிவித்துள்ளது.
இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் செய்திகள் வந்தன. குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்றும், மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.
இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 13ம் தேதி ஒருவர் கொரோனா தோற்று காரணமாக இறந்துள்ளார். இறந்தவரின் ஒரு உறவினர் தான் குடியரசு தலைவர் மாளிகையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
பணியாளரின் உறவினர் கொரோனாவால் இறந்ததால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தலைவர் மாளிகைக்கு அருகே உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசு மாளிகையில் வேலை செய்யும் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா தோற்று இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.