சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சிவப்பு மண்டல மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சத்தீஸ்கர் முழுவதும் விரைவில் பசுமை மண்டலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாநிலத்தில் ஒரே ஒரு ரெட் சோன் பகுதி மட்டுமே உள்ளதாகவும், அதிலும் கடந்த 72 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இதுவரை 24 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை எந்த ஒரு உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. ஏற்கனவே, கோவா கொரோனா பாதிப்பு இல்லாத பசுமை மண்டலமாக இன்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.