கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாவட்டங்கள் அதிக கூட்டம் கூடுவதைத் தடுக்க இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் மே 3ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனவே கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் நாளை முழு ஊரடங்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
எனினும் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என்றும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வந்த முழு முடக்கம் நாளை கிடையாது என ஆட்சியர் கோவிந்தராவ் கூறியுள்ளார். அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது.
அவசிய தேவைக்கு வெளியே செல்பவர்கள் மாஸ்க் அணி வேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். மேலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை திறக்கலாம் என்றும்,பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.