கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் தளர்வுகள் கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி ஊரடங்கை விலக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என்பது குறித்து பேச்சுவாத்தை நடத்தினார். இந்த ஆலோசனை நிறைவடைந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வுகளும் வழங்க கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகஉள்ளது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா தொற்று குறைந்தாலும் கூட பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.