நாட்டில் எந்த விழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், நிறைய இடங்களில் பொது விழாக்களுக்கு மக்கள் கூடி வருவதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த ஒரு சமய விழாவுக்கோ அல்ல தனிநபர் சார்ந்த விழாவுக்கோ அனுமதிக்க கூடாது, அதனை கட்டுப்பாடுடன் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்த போது, நிறைய மாநில அரசுகளில் இன்னும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றப்பட வில்லை. பொதுமக்கள் வெளியே வருவதை பார்க்க முடிகிறது. எனவே ஊரடங்கை முழுமையாக்க ஒரு சில வாரங்கள் கூட எங்களுக்கு தேவை படுகிறது. அப்போது தான் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சொல்லி இருந்தார்.
அதனை தொடர்ந்து சில மணிநேரங்களுக்குள்ளாகவே மத்திய அரசு இப்படியான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நிறைய பொது விழாக்கள் நடைபெற உள்ளன. நிறைய கோவில்களில் கொடை விழா, சமய வழிபாட்டு இடங்களில் திருவிழாக்கள் போன்றவை இருக்கும். இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அத்தகைய எதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.