இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ”விமர்சனங்களை சொல்லால் எதிர்கொள்வேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் ”திராவிட மாடல்” அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் விழுதாக, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் தமிழ்நிலத்தில் வேரோடி மக்கள் வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் என கழக முன்னோடிகள் வரிசையில் களம்பல கண்ட போராளியான கலகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி ஜூலை 4 ஆம் நாள் கழக இளைஞரணி செயலாளராகத் தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய் கழகத்தின் முன்னணி படையாக இளைஞர் அணியை தலைவர் உருவாக்கி வைத்திருந்தார். அதற்கு, என்னை நியமித்தபோது இன்று நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன்.
நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்பு. அதற்க்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்து இளைஞரணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்க தொடங்கினோம்.
கழக ஆட்சியில் இல்லாத போது இளைஞர் அணியினரை கொண்டு பல்வேறு மக்கள் நலப் பணியை செய்ய தொடங்கினோம். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர் நிலைகளை தூர்வாரினோம். நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
ஊரடங்கு காலத்தில் ஒன்றிய அரசும், அப்போதைய மாநில அரசும் செயலற்று நின்ற நேரத்தில் கழகத்தின் இளைஞரணி சார்பில் களப்பணிகளை செய்தோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஊரடங்கு நாட்களில் மருந்து, உணவு பொருட்களை இல்லம் தேடி சென்று வழங்கினோம்.
நீட் எதிர்ப்பு போராட்டங்கள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக பிரிப்புக்கு எதிரான போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு என கழகப் போராட்டங்களில் இளைஞர் – மாணவர்களை முன் நின்று வழிநடத்தி இருக்கின்றோம்.
இளைஞர் அணியில் தொகுதிக்கு தலா பத்தாயிரம் பேர் என தமிழக முழுவதும் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம். அவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் 3.5 லட்சம் பேரை ஒன்றிய கிளைகளிலும், பகுதி – நகர – போரூர் வார்டுகளில் நிர்வாகிகளாக நியமித்தோம். அவர்கள் சட்டமன்ற தேர்தலில் உற்சாகத்துடன் ஆற்றிய பணி கழகத்துக்கு மேலும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்திருந்தது.
இளைஞர் அணி பொறுப்புடன், கூடுதலாக சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினை கழக தலைவர் அவர்கள் அளித்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுத்ததும், முன் மாதிரி தொகுதியாக்கஎன்னாலான பணியை தொடர்ந்து செய்து வருகின்றேன். பொதுமக்கள் – அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செல்ல அதிக பொறுமை தேவை. அந்த வகையில், தொகுதி மக்கள் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடமையை உணர்த்தி உள்ளது.
இயக்கத்தின் கொள்கை, போராட்ட வரலாற்றை, அதனால் தமிழகம் பெற்ற பலனை, ஒன்றை ஆண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை பயிற்சி பாசறை மூலம் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக எடுத்து செல்லும் வாய்ப்பை கழகத் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கினர்.
இப்படியான நிலையில் தான் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது அமைச்சர்வையில் எனக்கு இடமளித்து, கடமை ஆற்ற பணித்துள்ளார். இந்த பொறுப்பை நான் சவாலாக எடுத்துக் கொண்டு என் பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன்.
இளைஞரணி செயலாராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை அமைச்சர் அறிவிப்பின்போது எதிர்கொள்கிறேன். விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன் என்று அன்று பதிலளித்திருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.
அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சி முகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறு உருவமாக வாழும் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, கழக முன்னோடிகள் – கழக உடன்பிறப்புகள் – என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்கள் – இளைஞர் அணியினர் – தமிழ் மக்கள் ஆகியோர் நம்பிக்கை காக்கும் வகையில் பணியினை தொடர்வேன் என்று இந்நேரத்தில் உறுதி அளிக்கிறேன். அன்பும் நன்றியுடன் உங்கள் ”உதயநிதி” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.