Categories
உலக செய்திகள்

“மெகுல் சோக்சி நாட்டிலிருந்து தப்பியதற்கு ஆதாரம் இல்லை!”.. ஆன்டிகுவா பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பிச்சென்றதற்கு தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாததால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் தலைமறைவானது, தெரிந்தவுடன், மத்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனினும் ஆண்டிகுவாவுடன் குற்றவாளிகளை நாடு கடத்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

எனவே அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மெகுல் சோக்சியை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றம் அவர் ஜாமினில் வர முடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

அவர் மீது சிபிஐ இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் மெகுல் சோக்சியின்  வழக்கறிஞர் விஜய் அகர்வால், பத்திரிகையாளர்களிடம் மெகுல் சோக்சியை காணவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமரான கேஸ்டன் பிரவுனி கூறுகையில், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பியதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் இருக்கலாம். அவரை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |