தேனி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை எரித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டி பகுதியில் கல்யாணகுமார் அவரது மனைவி ரஞ்சிதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கல்யாணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று திடீரென ரஞ்சிதா தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்த அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் காவல்துறையினர் மயானத்திற்கு சென்று எரிந்துகொண்டிருந்த ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகமடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்ததால் ரஞ்சிதாவின் கணவர் கல்யாணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து துணை சூப்பிரண்டு அதிகாரி உமாதேவி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.