திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு சுற்றி திரிவதால் ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி, வெங்கடேசன், திருப்பதி உள்ளிட்டோர் வளர்த்த மூன்று ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன் கொடூரமாக கடித்து குதறியநிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,
ஊர்மக்கள் சிறுத்தை தான் ஆடுகளை கடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஆராய்ந்தபோது நரி நடமாட்டம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நரிகள் தான் கொன்றதாக வனத்துறையினர் கூறிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் திருப்பதி என்பவர் தனது மற்றொரு ஆட்டை வீட்டிற்கு வெளியே கட்டி வைத்திருந்தார். அந்த ஆடு காலையில் மாயமாகி இருந்தது. பின் வயலுக்குச் சென்று பார்த்தபோது அங்கு அந்த ஆடு கொடூரமாக கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது.
இதையடுத்து மர்ம விலங்கு ஒன்று ஊருக்குள் சுற்றித் திரிவதாகவும், அதுதான் ஆடுகளை கடித்து தின்று வருவதாகவும் ஊர் மக்கள் புகார் அளித்தனர். மேலும் வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க சம்ப இடத்திற்கு சென்ற அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம விலங்கு ஊருக்குள் சுற்றித் திரிவது அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.