சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மே 4ம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்கப்பட்டன.
ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 44 நாட்களுக்கு பின்னர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்த அறிவிப்பில், மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
எனவே வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் மதுக்கடை பார்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் இந்த முக்கிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.