கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மினி மருத்துவமனையை சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வர, குணமடைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் திடீரென மாயமாவது, அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை என்பதால் வீட்டில் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள் உட்பட பல விஷயங்கள் கொரோனா சிகிச்சை குறித்து நாள்தோறும் வெளியாவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் தனிமை படுத்தும் வசதி இல்லாவிட்டாலும், இனி வீட்டிற்கே மருத்துவமனை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை ஐஐடி மாணவர்கள் நோயாளிகளை அவர்களது வீட்டின் மொட்டை மாடியிலோ, வீட்டின் அருகில் இருக்கக்கூடிய காலி இடங்களில் வைத்து தனிமைப் படுத்தும் விதமாக 4 அறைகள் கொண்ட MediCab என்னும் மருத்துவமனையை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் இரண்டு படுக்கை வசதிகள் கொண்ட ஐசியூ அறை, மறுத்துவருக்கான தனி அறை, தனிமை படுத்தும் வார்டு உள்ளிட்ட நான்கு அறைகள் இருப்பதாகவும், அது முற்றிலும் பாதுகாப்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.