Categories
மாநில செய்திகள்

“அதிகபட்ச கல்வி தகுதி உடையவர்கள்” கீழ்நிலை பணிகளுக்கு NO – மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

அதிக கல்வி தகுதி உடையவர்கள் கீழ்நிலை பணிகளில் அமர்த்தக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு இளநிலை என்ஜினீயரிங் பணிக்கு விண்ணப்பித்து பின்னர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் அடுத்த கட்டத்தேர்வுக்கு அழைப்புவரவில்லை. எனவே அது குறித்து விசாரித்த போது, அந்த பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. எனவே இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில், “அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித்தகுதி உடையவர்கள் அதிக கல்வித் தகுதி உடையவருடன் போட்டியிட முடியாது. இந்த இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் வைத்து பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே கீழ்நிலை பணிகளுக்கு உயர் கல்வி பெற்றவர்கள் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித்தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி உடையவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கீழ்நிலை பணிகளுக்கு அதிக கல்வி தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், என்ஜினீயரிங் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். சமீபத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் வீடுகளில் வேலைக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. இதே போன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்.பி.பி.எஸ். படித்தவர்களும் விண்ணப்பித்தனர்.

உயர் கல்வித் தகுதி உடைய ஒருவரால் கீழ்நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்? எனவே, கீழ்நிலை பணிகளில் அதிக கல்வி தகுதி உடையவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த வேலையின்  தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலாளர் மற்றும் ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும். எனவே இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஆதலால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Categories

Tech |