தமிழக அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அதன் பிறகு திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவரும் தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்யையும் அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சம்பந்தமான போஸ்டர்களை ஒட்டி அரசியலுக்கு விஜயை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது வாரிசு படம் ரிலீஸ் ஆவதால் விஜய்யை மீண்டும் ரசிகர்கள் போஸ்டர் மூலம் அரசியலுக்கு அழைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த போஸ்டரில் இங்கு எத்தனை வாரிசுகள் வந்தாலும், மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே என்ற வாசகம் இருக்கிறது.
அதோடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவருடைய மகன் ராகுல் காந்தி, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின், வைகோ மற்றும் அவருடைய மகன் துரை வைகோ, பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் வாரிசு அரசியல் என்ற பேச்சு தான் தற்போது கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் எத்தனை வாரிசுகள் வந்தாலும் தமிழக மக்களின் வாரிசு தளபதி விஜய் தான் என்று போஸ்டர் ஒட்டி இருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.