கொரோனா அச்சம் காரணமாக வங்கிக்கு செல்ல அஞ்சும் மக்கள் முடிந்தவரை தங்களின் பணபரிவர்தனையை ஏடிஎம் இயந்திரங்களிலேயே மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் அறிவித்தது.
இந்த புதிய கட்டண முறை இன்று நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. அதன்படி வார நாள்களில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி தரப்பில், “விதிமுறைகளின்படி ஒரு மாதத்திற்கு முன்பே, இதுகுறித்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளோம். வங்கி செயல்படும் நேரங்களில் டெபாசிட் செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மாதத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதற்கென தனிக் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், இந்த புதிய கட்டண முறை மூத்த குடிமகன்களின் வங்கிக் கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு, ஜன்தன் கணக்குகள், பார்வையற்றோர் வைத்திருக்கும் கணக்குகள், மாணவர்களின் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கியும் இதேபோன்ற கட்டண முறையை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.