அதிமுக கட்சியில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் 4 வருடங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் வெளிப்படையாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதிக்கொள்ள பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதேபோன்று ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்றும் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து. இதன் காரணமாக இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் தற்போது யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்ற புதிய சிக்கலும் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது 4 மாத காலத்திற்கு தான் செல்லுபடி ஆகும் என்று கூறப்பட்டது. அப்படிப் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது. இதேபோன்று கடந்த 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய பதவி அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதமே ஓபிஎஸ் பதவியும் காலாவதியாகிவிட்டது.
ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தற்போது யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் தலைமை பொறுப்பு இல்லாவிட்டில் தொண்டர்கள் யார் பேச்சை கேட்பார்கள் என்ற சந்தேகமும், கட்சியை யார் வழி நடத்தி செல்வார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் மிகவும் கவலையில் இருக்கிறார்கள். மேலும் அதிமுகவை தற்போது வழி நடத்தி செல்லக்கூடிய அதிகாரம் யாருக்கும் இல்லை என்பது தான் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பேசப்படுகிறது.