ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர்கள் குழு, கொரோனா பாதித்தவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதோ அங்கு மட்டும் நடமாட்டத்தை தடுத்தால் போதும் என ஆலோசனையில் தெரிவித்துள்ளனர். மேலும் பொது போக்குவரத்தையும், கூட்டம் சேர்வதையும் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். எதாவது ஒரு அறிகுறி இருந்தால் கூட தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. தொடர்ந்து மக்கள் காய்ச்சல் முகாமிற்கு செல்ல வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் சோதனையை அதிகரிப்பது வேண்டும்.
மேலும், திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். தற்போது உயிரிழப்பை குறைப்பதும், முன்கூட்டியே நோயை கண்டறிவதும் தான் நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். தற்போது, முழு ஊரடங்கு மூலம் பலன் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் முழு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.