கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 80,000 பேரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாகாணத்தையே சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தநிலையில், ஹூபேய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் எந்த ஒரு நபருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு நபருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் முதலில் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். ஆனால் தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.