திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நம்மை வீழ்த்த நம்மை தவிர வேற யாராலும் முடியாது. அதற்கு உள் கருத்து என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கவை வெற்றி பெறுவதற்கு வேறு யாராலும் முடியாது, ஆனால் நம் உள்ளே கருத்து வேறுபாடுகள், நமக்குள்ளே சச்சரவுகள், நமக்குள்ளே பிரச்சனைகள் என்பது வந்து விடக்கூடாது. அதை புரிந்து கொண்டு தேர்தலில் நாம் செயல்பட வேண்டும்.
நமக்குள்ளே ஒரு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், தலைவர் கலைஞர் அவர்களை நாம் கேட்டால், என்னுடைய குடும்பம் என்பது ஒரு புகைப்படத்திற்குள் அடைத்து விட முடியாது. உலகில் இருக்கக்கூடிய அத்தனை தமிழர்களும் என்னுடைய குடும்பம் தான் என்று ஒரு தலைவர் தன்னுடைய இயக்கத் தோழர்களை ”உடன்பிறப்பே” என்று சொல்வார். ஆண், பெண் என்ற வித்தியாசம் கூட வந்து விடக்கூடாது என்பதற்காக ”உடன்பிறப்பே” என்று அழைத்த தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
அப்படி ஒரு குடும்பத்திலே சச்சரவுகள் இருக்கலாம், மனக்கசப்புகள் இருக்கலாம், ஆனால் இறுதியிலே அது ஒன்றாய் இணைந்து நிற்க வேண்டிய ஒன்று. அந்த உணர்வு நமக்கு இருக்க வேண்டும். நாம் சுயமரியாதைகாரர்கள், திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். அந்த வழியிலே வந்திருக்கக் கூடியவர்கள், தமிழர்கள். இந்த தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ”திராவிட முன்னேற்ற கழகம்” என தெரிவித்தார்.