மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் திமுக கட்சியின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவை மிரளவைத்த கட்சி திமுக. தாய் மொழியான தமிழ் மொழிக்கு பாதிப்பு என்றால் யாரை வேண்டுமானாலும் திமுக எதிர்க்கும். மதுரையில் முதன் முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தோம்.
பாஜக கட்சியில் வரலாறு தெரியாதவர்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஹிந்தி மொழி பேசாமல் இருப்பதால் மத்தியில் ஆள்பவர்களுக்கு தனி தீவாக தெரிகிறோம். ஹிந்தியை எதிர்த்து சட்டத்தை எரித்த குற்றத்திற்காக 10 எம்எல்ஏக்களை எம்ஜிஆர் பதவி நீக்கம் செய்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இந்த தீர்மானத்தை மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் கொண்டு வர இருக்கின்றனர். இந்தியாவில் இந்தி மொழியை எதிர்க்கும் ஒரே தலைவன் என்றால் அது மு.க ஸ்டாலின் மட்டும்தான். தமிழகத்தை பொறுத்த வரை திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் உள்ளே வர முடியாது. யாருக்கும் இடமும் கிடையாது. மேலும் திமுக கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து விட்டனர் என்றும், திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறினார்.