அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும், எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு, ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த பதிலில், அதிமுகவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அதற்கு நேர் மாறாக, சட்ட விதிகளுக்கு எதிராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும், பொதுக்குழுவால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும், திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
அடிப்படை உறுப்பினர்களுக்க்கு தான் அந்த அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவை காட்டி, இது போல நோட்டீஸ் அனுப்பி இருப்பது சட்ட விரோதம் என்றும், யூகத்தின் அடிப்படையில், அனுமானத்தின் அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
கட்சி அலுவலக முகவரியை பயன்படுத்திய தொடர்பாக ஏற்கனவே கட்சி அலுவலகம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அவர் தெரிவித்த கருத்துக்கள், பிரதான வழக்கினுடைய விசாரணைக்கு பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே கொடியையோ, முகவரியையோ, அலுவலக பெயர் என அனைத்தையும் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.