சீனாவில் புதிதாக கொரோனா வைரசால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கி தற்போது உலகையே அதிரவைத்து வருகிறது கொரோனா வைரஸ். தற்போது சீனாவை தவிர்த்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. தொடக்கத்தில் சீன மக்களை கொரோனா கொத்து கொத்தாக கொன்று குவித்தது. ஆனால் தற்போது சீனாவில் இதன் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
இன்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 740 ஆக இருக்கும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 331 ஆக உள்ளது .கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சீனா வெளியிட்டு வரும் நிலையில், முதல் முறையாக தற்போது தான் புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு நாளில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக குறைந்துள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது