தமிழகத்தில் யாரிடமும் 1 மாத வாடகையை கேட்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு, வருவாய் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் இருந்து வீட்டு வாடகை வசூல் செய்யக்கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். மீறி அவர்களிடம் வசூலித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அதே போல தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர் ஒருமாத வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பவும் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே டெல்லி அரசு வாடகை கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளநிலையில் தமிழகத்திலும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.