வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.
மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதையடுத்து அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான ஹர்சிம்ரத் சிங் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். தற்போது ஆளும் கூட்டணியிலிருந்து விலகவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை அந்தக் கட்சியைச் சேர்ந்த சுக்பிந்தர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.