விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். லேண்டரை படிப்படியாக விஞ்ஞானிகள் குறைத்து வந்தனர்.
23 கி.மீ. தொலைவில் இருக்கும் சந்திரயான்-2 லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே நிசப்தமானது.
அதன்பின் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார். சந்திரயான்-2 ஆர்பிட்டர் சரியாக பயணித்து வருவதால், அதைவைத்து 95 % ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.