22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.. அப்போது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் அனைவரும் சுயஊரடங்கை பின்பற்ற வேண்டும் உட்பட 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள 9 அம்ச நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, வரும் 22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்றும், அதேபோல மெட்ரோ ரயில்களும் ஞாயிறன்று இயங்காது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் அத்தியாவசிய பணிகளைத்தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பிரதமரின் அறிவுறுத்தலின் படி 9 அம்ச கோரிக்கையை ஞாயிறன்று அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.