புது வகையான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக மக்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதுமாக உள்ள மக்களை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா அறிமுகமாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியிருந்தாலும், அதன் வேகம் தற்போது குறையாமல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான ஊரடங்கு மற்றும் பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் தீவிரமாக பரவும் எனவும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தலைநகர் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் புதிய வைரஸின் மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புது வகை வைரஸின் முழுமையான விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை என்றாலும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு கேட்டு கொண்டுள்ளது.