நீதிமன்றங்களுக்கு உள்ள கோடை விடுமுறை இந்த முறை கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முக்கியமான வழக்குகள் மட்டும் வீடியோ மூலம் நடைபெற்று வருகின்றனர். இந்த காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமைநீதிபதி தலைமையில் 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த மூன்று முறையாக கூடி நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த முடிவுகளை எடுத்து அறிவித்து வருகின்றது.
இந்த குழுதான் மே 3ஆம் தேதி வரை நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும், யார் யார் வழக்குகளை விசாரிப்பார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு அதன்படி விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி ஏ பி. சாஹி தலைமையில் அவசர குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வழக்கமாக மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள நீதிமன்றம் அனைத்திற்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவது கிடையாது என்றும், வழக்கம் போல நீதிமன்றம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கீழமை நீதிமன்றங்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். வியாழக்கிழமை மட்டும் அவசர வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறும். அந்த விடுமுறை தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே 3ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்றம் வழக்கம் போல செயல்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.