தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி தயாராகி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் ” இந்த ஆண்டு மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக 2022ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவார். அவர் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என சமூக ஊடகம் வழியாக அறிகிறேன். எனவே அவரைக் குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. தனது பொறுப்பு என்ன? தன்னையும் அணியையும் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும்” என தோனியை குறித்து அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த தலைவரான ஷேன் வாட்சன் கூறியதாவது ” இன்னும் டோனி விளையாடுவதற்கு விரும்புகிறார். அவரின் திறமையையும் கடின முயற்சியும் பார்க்கும்போது அவர் நாற்பது வயது கடந்தும் விளையாட முடியும். தனது உடல் தகுதியை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார். தோனியின் தீவிர ரசிகன் நான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவதை நான் காண விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.