நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த ஊழியர்கள் இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் அடங்காததால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கட்டிடம் மற்றும் பஞ்சு எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கூறியதாவது, இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர்.