ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான ஆல்வின் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இந்த தம்பதிகள் தனியார் நிதி நிறுவனத்தில் தங்களது தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வந்துள்ளனர். அப்போது இந்த தம்பதிகளுக்கு நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பொன்னுசாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி ஆல்வினிடம் தங்க நகைகளை பாதுகாக்கும் லாக்கர் எங்கள் நிறுவனத்தில் உள்ளது எனவும், அதற்கு வாடகை எதுவும் கட்ட வேண்டாம் எனவும் ஆல்வினிடம் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ஆல்வின் தனது 101 பவுன் தங்க நகைகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பொன்னுசாமியிடம் கொடுத்துள்ளார் அதனைப் பெற்றுக்கொண்ட பொன்னுசாமி ரசீதை மட்டும் வழங்கி விட்டு லாக்கரின் சாவியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது தங்க நகையை எடுப்பதற்காக ஆல்வின் நிதி நிறுவனத்திற்கு சென்றபோது பொன்னுசாமி அங்கு இல்லை. மேலும் பொன்னுசாமி ஆடிட்டராக பதவி உயர்வு பெற்று வேறு ஒரு கிளைக்கு சென்று விட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொன்னுசாமி 10 பேரின் பெயரில் போலியான ரசீது தயாரித்து ஆல்வினுக்கு சொந்தமான 101 பவுன் நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வட்டியுடன் சேர்த்து 29 லட்சம் ரூபாய் கொடுத்தால் நகையை மீட்கலாம் என ஆல்வினிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆல்வின் காசிமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.