வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தரப்பினருக்குமான உறவை வலுப்படுத்த இரண்டு நாடுகளும் சம்மதித்துள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா, கடந்த 1950 ஆம் வருட காலகட்டத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்பின்பு இருநாடுகளும் சமாதானம் ஆனது. எனினும் மீண்டும் மோதல் உருவானது. அதாவது வடகொரியாவை எதிர்க்கும் நபர்கள் தென்கொரியாவிற்கு சென்று வடகொரியாவின் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதி ஹீலியம் பலூன்களில் துண்டு சீட்டுகளை வைத்து அனுப்பியுள்ளார்கள்.
எனவே வடகொரியா, பல தடவை தென்கொரிய அரசாங்கத்தை எச்சரித்தது. ஆனாலும் அந்த செயலை அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கொரியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் கேசாங் நகரத்தில், இரண்டு நாட்டிற்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
மேலும் வடகொரியா தென்கொரிய நாட்டுடனான தகவல்தொடர்பு பாதையை முடக்கியது. எனவே வடகொரியா, தென்கொரியா நாட்டுடனான தங்களின் உறவை முற்றிலுமாக முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் திடீரென்று ஒரு வருடம் கழித்து இரு நாட்டிற்கும் இடையேயான தகவல் தொடர்பு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை தென் கொரிய நாட்டின் அதிபரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.