வடகொரிய அரசு, கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய ராணுவத்தினர் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் உயர் அதிகாரியான கிம் யோ ஜொங், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், தங்களிடமிருந்து மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரியாவின் எல்லைப்பகுதியில், இம்மாதம் 16ம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை தென்கொரிய படைகளும் அமெரிக்காவும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள்.
அதற்கான முன்னோட்டமாக, நான்கு நாட்கள் தொடக்கப் பயிற்சியை இரண்டு நாடுகளின் வீரர்களும் நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை வட கொரிய அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. இது தொடர்பில், அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியான கிம்யோ ஜாங் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை அதிகரிப்பதாக கூறியிருக்கிறார். தங்களின் எச்சரிக்கையை மீறி ராணுவ பயிற்சிகளைத் தொடர்வது தென்கொரியா செய்யும் துரோகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். வட கொரியாவை எதிர்த்து நடக்கும் செயல்பாடுகளை தடுப்பதற்காகவும், முன்னதாகவே தாக்குதல்களை நடத்த திறன்களை மேம்படுத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.