வடகொரிய அதிபர் கிம் வந்ததும் கொரிய எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஒரே நாடாக இருந்த கொரியா வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்து சென்று விட்டது. அதை தொடர்ந்து தான் இருநாடுகளுக்கும் இடையே பகை உருவானது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
2011 ஆம் ஆண்டில் வடகொரியாவின் அதிபராக 36 வயதான கிம் ஜாங் உன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் தலைவரானது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்தது. அடிக்கடி சண்டை தான் நடக்கும்.
தென்கொரியாவை எப்போதும் பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்றும், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையிலும் வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை துணிச்சலாக நடத்தி வந்தது.
இது ஐ.நாவின் தீர்மானங்களை மீறும் செயலில் செயல்பட்டதால் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியா, இருப்பினும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த சூழல் தலைகீழாக மாறியது. ஆம், தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் பரம எதிரிகளாக இருந்த இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நட்பு உருவானது.
வடகொரியா தலைவர் கிம்மும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த பதற்றம் குறைந்தது. சரி இனி எந்த தாக்குதலும் இரு நாட்டுக்கும் இடையே நடக்காது என்று உலக நாடுகள் நினைத்தது..
ஆனால் இந்த நெருக்கமான சூழல் ஒரு ஆண்டுகூட நீடிக்கவில்லையாம். என்னவென்று தெரியவில்லை திடீரென வடகொரிய அதிபர் கிம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இனி தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவானது.
இந்த நிலையில் தான் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என வரையறுக்கப்பட்ட கொரிய எல்லை பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பர துப்பாக்கிச்சண்டை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.41 மணிக்கு மத்திய எல்லை பகுதியான சேர்வன் பகுதியில் தென்கொரியா வீரர்கள் மீது வடகொரியா இராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்..
இதற்கு தென்கொரியா சும்மா இருக்குமா.. அவர்களும் வடகொரிய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனினும் இந்த சண்டையில் இரு தரப்பிலும் யாருக்கும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரியவில்லை. அதேபோல் எதற்காக, எந்த காரணத்திற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது பற்றியும் தெரியவில்லை.
இது குறித்து அறிய வேண்டும் என வடகொரியா அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வடகொரியா ராணுவம் தென் கொரிய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்துவது இதுவே முதல் முறை.
அதிபர் கிம் ஜாங் உன் சமீப நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதனால் அவருக்கு இதயஅறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இந்த சூழலில் 20 நாட்களுக்கு பிறகு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கெத்தாக வந்து உழைப்பாளர் தினத்தில் உரத்தொழிற்சாலையை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்தார்.. கிம் பொதுவெளியில் தென்பட்டதும் இந்த தாக்குதல் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.