சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
படிப்படியாக வரும் தினங்களில் இந்த மழை அதிகரிக்க கூடும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.