கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தமிழக பணியாளர்கள் மட்டுமின்றி சுமார் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பின்பு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு சரிவர உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கடந்த 4ம் தேதி வடமாநில தொழிலாளர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த நிலையில் ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று காலை மீண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அணுமின் நிலைய முகப்பு பகுதியில் கூடி போராட்டத்தல் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது வன்முறை வெடித்ததில் காவலர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.