நூதன முறையில் தங்க நகையை திருட முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் என்பவர் தான் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராமலிங்கம் 27 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அமித்குமாரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அமித்குமார் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது ராமலிங்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து விட்டார். அதன் பிறகு அமித்குமாரை சங்கரன்கோவில் டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.