எந்திரத்தில் சிக்கி தனது இரண்டு விரல்கள் துண்டான விரக்தியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பால் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எந்திரத்தில் அவரது வலது கை சிக்கியதால் கடந்த ஜனவரி மாதம் அவருடைய இரண்டு விரல்கள் துண்டாகி விட்டது.
இதனால் ஹரிபால் தாஸ் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.