காதல் தம்பதிகள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டும் குழந்தை பிறக்காததால் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மகாவைகுண்டத்தின் வீடு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே இருவரும் இறந்து கிடந்துள்ளார். அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.