கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் சில நாடுகள் தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் அல்லது சான்றிதழ்களை கொடுத்து வருகின்றனர். அதாவது அவர்கள் பாதுகாப்பானவர்கள், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு செய்து வருகின்றனர். சிலி நாடு கடந்த வாரம் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு இந்த ஆரோக்கிய பாஸ்போர்ட் வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது.
அவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆன்டிபாடிகள் இருப்பதை அறிந்த உடன் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம். ஆனால் ஒருமுறை தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “தொற்றிலிருந்து விடுபட்டட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் அல்லது அபாயமற்றவர்கள் என சான்றிதழ் கொடுப்பது கொரோனா பரவும் அபாயத்தை அதிகரிப்பதே ஆகும் .
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து தங்களது உடலில் கொரோனாவை எதிர்கொள்ளும் ஆன்டிபாடிகள் இருப்பவர்களுக்கு கொரோனா மீண்டும் ஏற்படாது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை என தெரிவித்த உலக சுகாதார மையம், அதனை நம்பி நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.