சீனா கனடாவிற்கு அனுப்பிய முகக்கவசங்கள் தரமில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கனடா பிரதமர் முடிவாக கூறிவிட்டார்.
சீனாவிடம் ஆர்டர் செய்து பெறப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு பகுதியாக இருந்த N95 ரகத்தில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் மட்டுமே கனடிய தரத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. மற்ற 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக இல்லாததால் அந்த முகக்கவசங்களுக்கு கனடா நிச்சயமாக பணம் செலுத்தாது என கூறினார்.
சீன வர்த்தகர் ஒருவரிடம் வாங்கப்பட்ட 62,000 முக கவசங்களை ஏற்கனவே ரொரன்றோ திருப்பி அனுப்பியுள்ளது. அது குறித்து அறிக்கை வெளியிட்ட மேயர் அலுவலகம் அந்த முகக் கவசங்கள் தரக்கட்டுப்பாடுகளை எட்டவில்லை என்ற காரணத்தினால் அதனை திருப்பி அனுப்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.