அமெரிக்காவில் ஒன்பது வயது சிறுவனை தத்து எடுக்க 12 மணி நேரத்தில் 5000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஓக்லகோமா நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டன் மற்றும் அவரது தம்பி பிரைசன். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தனர். ஒரு குடும்பத்தினர் பிரைசனை கடந்த ஆண்டு தத்தெடுத்து சென்றனர். அதற்குப்பின் ஜோர்டன் தனிமையில் வாடி வந்ததுடன், அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கியுள்ளான். இந்த நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஜோர்டானின் கதையை அறிந்து அவனின் கவலையை வெளியுலகிற்கு காட்டும் வகையில் பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டது.
அந்த பேட்டியில் அச்சிறுவனின் ஆசை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு ஜோர்டான் கூறியதாவது “எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், குறைந்தபட்சம் ஒரு அம்மா அல்லது ஒரு அப்பா வேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. அப்பா அம்மா இருந்தால் எப்போதும் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம்” என அச்சிறுவன் கூறியிருந்தான். பெற்றோருக்காக ஏங்கிய சிறுவனின் இந்த வீடியோ இணையத்தில் பரவி பலரையும் கண்கலங்க செய்தது. இதன் வெளிப்பாடாக வீடியோ வெளியான 12 மணி நேரத்தில் சுமார் 5000 பேர் அச்சிறுவனை தத்துதெடுக்க விரும்பி விண்ணப்பித்துள்ளனர்.