திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ( திமுக கூட்டணி ) ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தில் 11 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். . கே.எஸ் அழகிரி சிதம்பரத்திலிருந்தும், திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும் பங்கேற்றிருக்கிறார். அதே போல வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஐஜேகே கட்சியின் ரவி பச்சமுத்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானகள் நிறைவேற்றபட்டது. அதில்,
மாநில அரசு கடைபிடிக்கும் இட ஒதுக்கீடு விகிதாச்சார மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்திடுக:
மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய பாஜக அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டனங்கள். கடிதம் எழுதுகிறோம், கோரிக்கை விடுத்துள்ளோம் என்று நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் காலை வாரியது போல அதிமுக அரசு இதிலும் விபரீத விளையாட்டு நடத்தாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றிட வேண்டும். நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகளையும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தும் சூழ்நிலை மத்திய பாஜக அரசு ஏற்படுத்திட வேண்டாம் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.
கொரோனா தடுப்பிலும் – ஊரடங்கிற்கு பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய – மாநில அரசுக்கு கண்டனம்:
மத்திய பாஜக அரசைப் பொருத்தவரை 1.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீத பொருளாதார நிவாரணத் திட்டத்தை மட்டும் வெளியிட்டு, நாட்டு மக்களை ஏமாற்றியிருப்பதோடு மாநில அரசுக்கள் கோரும் நிதியையும் வழங்காமல் வஞ்சித்து வருகின்றது.
கொரோனா நோய் பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாகவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்த தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு கொரோனாவை நோயை கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி கண்டுவிட்டது.
ஊரடங்கு அறிவிப்பில் குழப்பம், ஒவ்வொரு மாதத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் பண உதவி அளிக்க வில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது வாழ்வாதார இழப்பிற்க்கும் உள்ளான யாருக்கும் உதவி செய்யாமல் கைவிரித்தது. பரிசோதனை கருவிகள் கொள்முதலில் ஊழல், ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கு அவசரகதியில் அறிவித்தது. உச்சநீதிமன்றம் வரை சென்று டாஸ்மாக் கடைகளை திறந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் புறக்கணித்தது என அனைத்திலும் அனைத்து முனைகளிலும் தோல்வி கண்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சாரம் திருத்தச்சட்டம் 2020 திரும்பப் பெறுக:
தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்மை முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்து வரும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும் அதன் மூலமாக மாநில உரிமையை மேலும் பறித்திடவும், உள் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
மாநில உரிமைகளை கையகப்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கட்டண சலுகைளை ரத்து செய்யவும் கொண்டுவரப்படும் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும்.
தன்னலமற்று பணியாற்றியவர்களின் சேவைக்கு பாராட்டு:
கொரோனா பேரிடரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மிக முக்கியமான பணிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தமிழக காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இனிவரும் நாட்கள் அரசின் சுகாதார அறிவுரைகளுக்கு மதிப்பளித்து கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடிகளாக விளங்கிய வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறது என்று நான்கு தீர்மங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.