சிவகாசியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி 34-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகுதி மேயர் சங்கீதா கலந்து கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த மேயர் பொதுமக்களிடம் பேசும்போது, கடந்த 1௦ ஆண்களாக சிவகாசியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சிவகாசி மாநகராட்சிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு தேவையான நிதிகளை பெற்று தருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார். எனவே மாநகராட்சியில் அனைத்து வித வளர்ச்சி திட்டபணிகளையும் விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார். இந்த கூட்டத்தில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து 28-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் கவுன்சிலர் வெயில்ராஜ், 35-வது வார்டில் துணைமேயர் விக்னேஷ் பிரியா, 39-வது வார்டில் கவுசிலர் ராஜேஷ், 40-வது வார்டில் கவுன்சிலர் சபையர் ஞானசேகரன், 46-வது வார்டில் மண்டல தலைவர் சேவுகன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளனர்.