Categories
அரசியல் மாநில செய்திகள்

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக… மீறினால் ரூ 1,00,00,000 இழப்பீடு..!!

திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அவதூறு கூறியதற்காக, ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்களுக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் படத்தைப் பாராட்டியதையடுத்து, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளது என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தின் பட்டாவை வெளியிட்டு, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என திமுக நிரூபித்துவிட்டால் ராமதாஸ்அரசியலை விட்டு விலகத் தயாரா என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே பாஜகவின் மாநிலச் செயலர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் இது தொடர்பாக விசாரிக்க புகாரளித்தார். அதன்படி, கடந்த நவ.19ஆம் தேதி முரசொலி நிர்வாக இயக்குநரான உதயநிதி ஸ்டாலினை ஆணையத்தின் முன் ஆஜராகி ஆவணங்களைச் சமர்பிக்க உத்தரவிlப்பட்டது. உத்தரவின்படி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆர்.எஸ். பாரதி நேரில் ஆஜரானார். ஆனால், புகாரளித்தவரான சீனிவாசன் ஆதாரங்களைச் சமர்பிக்க கால அவகாசம் கேட்டார்.

விசாரணை முடிந்து வெளியில் வந்த ஆர்.எஸ். பாரதி, ஆணையம் வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் இல்லை என்றும், மக்கள் மத்தியில் திமுகவின் நற்பெயரை கெடுப்பதற்காக இது பொய்யாக திரிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார். மேலும் அவர், இந்த வழக்கு இத்துடன் முடிந்துவிட்டது என்றும் கூறினார்.

இந்நிலையில், ஆர்.எஸ். பாரதி சார்பில் திட்டமிட்டு அவதூறு பரப்பிய ராமதாஸூக்கும், சீனிவாசனுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அவதூறாக பரப்பிய சமூக வலைதள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் திமுகவிடம் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்; தவறினால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |